உழகத் தமிழ் (செம்மொழி) மாநாடு 2010
கோவை
செம்மொழி
உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ்மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார். இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு" எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் பேணி வளர்த்தனர். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.
கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கி.பி 18 ஆம் நூற்றாண்டினராகிய மாதவச் சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கது.
தமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞான முனிவர் கருதுதற்கு உரியர்.
பன்மொழிப் புலமைமிக்க, புகழ்பெற்ற தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ்மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் ஆய்வுநூல்களில் நிலைநாட்டியுள்ளனர்.
“இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது.
சங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்" எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.
உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ . கே . இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.
மேலே கூறப்பெற்ற மொழிவல்லுநர்களின் கருத்துகள் ஒருபுறமாக, வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூலமொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். திராவிடமொழிகளிலும் வல்ல மேலைநாட்டு வடமொழிப் பேராசிரியர்கள் டி. பர்ரோ, எம். பி. எமனோ உள்ளிட்டோர் வடமொழி வேதங்களில் காணப்படும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சிஅறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.
எனவே, செம்மொழித்தமிழின் சிறப்பும் உலகமக்களுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பும் தெள்ளிதிற் புலனாகும்.
அறிஞர் பெருமக்களும் மொழிவல்லுநர்களும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே தமிழ் செம்மொழி என்ற கருத்தினைத் தளராது வலியுறுத்திக் கூறி வந்திருப்பினும், மாண்புமிகு தமிழக முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மேற்கொண்ட மதிநுட்பத்துடன் கூடிய விடாமுயற்சியின் விளைவாக இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்நன்னாள் தமிழர் வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகும்.
0 comments:
Post a Comment